பத்மநாபபுரத்தில் வரி நிலுவை ரூ.1.27 லட்சம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்
பத்மநாபபுரம் நகராட்சியில் இரட்டிப்பு வரி விதிப்பாக இருப்பதால், நிலுவைத்தொகை ரூ.1.27 லட்சத்துக்கு மேல் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் மேத்யூஜோசப், சுகாதார அலுவலர் டெல்விஸ்ராஜ், துணைத் தலைவர் பீர்முகமது மற்றும் உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியவுடன் உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன் பேசுகையில், கூட்டப்பொருளில் 21 வார்டுகளில் அமைந்துள்ள 91 கட்டடங்களுக்கு புதிய வீடுகள் கட்டப்பட்டு, பழைய வரிவிதிப்பு எண்கள் நீக்கம் செய்யப்படாமல் நிலுவையிலுள்ளது.
இரட்டிப்பு வரி விதிப்பாக இருப்பதால் பழைய சொத்து வரி விதிப்பு எண்களின் மீதான நிலுவைத்தொகை ரூ.1.27 லட்சம், நடப்பு வசூல் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, சொத்துவரி கேட்பிலிருந்து வஜா செய்ய மன்றத்தில் கேட்டு இருக்கிறீர்கள். இது அதிகாரிகள் செய்த தவறு. இதற்கு மன்றத்தின் அனுமதி கேட்பது தவறு.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார் அவர். இதற்கு ஆணையர் மேத்யூ ஜோசப் பதிலளிக்கையில், இதில் முறைகேடோ, பண இழப்போ கிடையாது. இது 2006-ல் இருந்தே வருவாய் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் செய்த தவறினால் வந்தது. இதை முன்னரே சம்பந்தப்பட்டவர்கள் கவனித்திருக்க வேண்டும். மன்ற உறுப்பினர்கள் என்ன முடிவு சொல்கிறீர்களோ அதன்படி செய்யலாம் என்றார்.
உறுப்பினர் பெரும்பான்மையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூறினர். தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி,
அக்காலகட்டங்களில் பணியாற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றலாம் என்றார்.
மேலும் உறுப்பினர்கள் சசீதரன் நாயர், உவைஷ் உள்ளிட்டோர் பேசினர்.