தினமணி 3.11.2009
ரூ.1.28 கோடியில் வடிகால் வசதி
புதுச்சேரி, நவ. 2: புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் ரூ.1.28 கோடி செலவில் வடிகால் வசதி மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் அமல் செய்யப்பட உள்ளன என்று முதல்வர் வி.வைத்திலிங்கம் கூறினார். இப் பகுதியை அதிகாரிகளுடன் அவர் திங்கள்கிழமை சென்று பார்த்தார். இது குறித்து அவர் கூறியது:
புதுச்சேரி நகரப் பகுதியில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணா நகர் பகுதியில் 12-வது மற்றும் 13-வது குறுக்குத் தெரு பகுதி மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையை இணைக்கும் கிருஷ்ணா நகர் மெயின் ரோடு, மற்றும் இணைப்புச் சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக ரூ.1.28 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் அமல் செய்யப்படும்.
இத் திட்டத்தை நிறைவேற்ற தடையாக இருக்கும் ஒரு சில ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர ஜவஹர் நகர் பகுதியிலும் வடிகால் வசதி திட்டத்தை அமல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் முதல்வர்.