மாநகராட்சி மன்றக் கூட்டம்: 133 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் மொத்தம் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மொத்தம் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
20 பள்ளிகளில் ஆங்கிலம்: 20 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பு தொடங்கப்பட்டு ஆங்கில வழிக் கல்வி விரிவுப்படுத்தப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்படிருந்தது. இப்போது சென்னையில் 99 பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனை விரிவுப்படுத்தும் வகையில் மேலும் 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல, 10 சென்னைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் புதியதாக தொடங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் பிரதான சாலையில் உள்ள பழைய மருந்தகம் மற்றும் பெண்கள் மருத்துவமனையை இடித்து விட்டு, 24 மணிநேர மகப்பேறு மருத்துவமனை கட்டவும், ஆலந்தூர் செüரி தெருவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், துப்புரவு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கவும், பல்வேறு பணிகளுக்கு பணியாணை வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.