13,600 கட்டட திட்டம்: ஆன்லைன் மூலம் தெற்கு தில்லி மாநகராட்சி அனுமதி
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 13,600 கட்டட திட்ட வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கட்டடங்களின் வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதியளிக்கும் வசதியை, கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெற்கு தில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியது.
ஒவ்வொரு கட்டடங்களின் வரைபடங்களுக்கும் அதிகபட்சமாக 7 நாள்களுக்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 24 மணி நேரத்துக்குள்ளேயும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபடங்களில் தேவையான மாற்றங்கள் செய்வதும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
கட்டட வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கும் வசதியை நாட்டிலேயே முதல் முறையாக தெற்கு தில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியது.
இந்த ஆன்லைன் வசதிக்காக, சமீபத்தில் “ஸ்காச்’ குழுமத்தின் விருதையும் பெற்றது.
தற்போது, கட்டட வரைபடங்களுக்கு தெற்கு தில்லி, வடக்கு தில்லி, புது தில்லி மாநகராட்சிகள் ஆன்லைன் மூலம் அனுமதி அளித்து வருகின்றன.