குமாரபாளையம் நகரில் ரூ.1.37 கோடியில் 38 ஆழ்குழாய் கிணறுகள்: வறட்சி நிவாரணத் திட்டத்தில் அமைக்க கூட்டத்தில் தீர்மானம்
குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ரூ.1.37 கோடி மதிப்பில் 38 இடங்களில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தண்ணீர் விநியோகித்தல், பழுதடைந்த குழாய்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குமாரபாளையம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). பொறியாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, துப்புரவு அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் : சிவசுப்பிரமணியம் (தேமுதிக) : நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பண்டங்கள், குடிநீர், குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழைய எண்ணெயைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்காரவேலன் (அதிமுக) : நகரின் மையப்பகுதியில் ஓடும் கோம்புப் பள்ளத்தை கடைசி வரை தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும்.
ரூபாராணி (காங்.): ராஜாஜி வீதியில் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. சாக்கடை பணிகளும் பாதியில் நிற்கிறது. மக்களின் சிரமத்தைப் போக்க வேண்டும்.
சிவசுப்பிரமணியம் (தேமுதிக): குமாரபாளையம் நகரில் கேபிள் நடத்துவோர் ரூ.70 கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக ரூ.100 வசூல் செய்கின்றனர். தர மறுப்போருக்கு கடுமையாக மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த வேண்டும்.
23-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைக் போக்க வேண்டும் என உறுப்பினர் சுகுணாவும், 2 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் தண்ணீரும் போதுமான அளவு வருவதில்லை. எனவே, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் என 28-வது வார்டு உறுப்பினர் காளியம்மாளும் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய தலைவர் சிவசக்தி கே.தனசேகரன், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து குறைகள் தீர்க்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், வறட்சி நிவாரணத் திட்டத்தில் குமாரபாளையம் சேரன் நகர், முருங்கைக்காடு, அபெக்ஸ் காலனி, சுந்தரம் காலனி உள்பட 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து கைப்பம்பு பொருத்தவும், தண்ணீர் தேவை அதிகமுள்ள 28 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, சிறிய மோட்டார் பொருத்தி தண்ணீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும், காவேரி நகர், பெராந்தர்காடு, விட்டலபுரி, அம்மன் நகர் உள்பட 10 இடங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் வைத்து, தொட்டிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கவும், முருங்கைக்காடு, நேதாஜி நகரில் ஆழ்குழாய் கிணறுகளை தூர்வாரி சுத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தலைமை நீரேற்று நிலையத்தில் ரூ.25 லட்சத்தில் மின்மோட்டார்கள மாற்றியமைத்தல் உள்ளிட்ட பணிகளை ரூ.1.37 கோடியில் நிறைவேற்றுதல் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.