தினகரன் 29.12.2009
சென்னையில் 1370 பேருக்கு இலவச கான்கிரீட் வீடுகள்
ஆலந்தூர் : சென்னையில் 1,370 பேருக்கு ரூ.18 கோடியில் இலவச கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகிறது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி 140&வது வட்டத்தில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், இலவச கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடக்க விழா கிண்டியில் நேற்று நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்து, திட்டத்தை தொடங்கி வைத்தார். மண்டல துணை ஆணையர் பிரேம்நாத், முன்னாள் கவுன்சிலர் தாமோதரன் முன்னிலை வகித்தனர்.
140&வது வார்டுக்கு உட்பட்ட 24 பேருக்கு தலா ரூ.1.3 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீடு கட்டும் திட்டத்துக்கான உத்தரவை வழங்கி மேயர் பேசியதாவது:
ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் புகாமல் தடுக்க சென்னையில் உள்ள 22 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு கால்வாய் கட்டும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் 1370 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான உத்தரவு இன்று முதல் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.18 கோடியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி தந்துள்ளன. ஒரு வீட்டுக்கு ரூ.1.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் பேசினார்.
விழாவில் 140&வது வட்ட முன்னாள் கவுன்சிலர் தாமோதரன், வட்ட செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வம், ஆதிமூலம், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.