தினமணி 01.12.2009
கணேசபுரம் சுரங்க மேம்பாலம்: நிலம் கையகப்படுத்த ரூ. 13.95 கோடிஇழப்பீடு வழங்க மாநகராட்சி அனுமதி
சென்னை, நவ. 30: சென்னை பெரம்பூர் அருகே கணேசபுரம் சுரங்கப் பாதை உள்ள இடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ. 13.95 கோடி வழங்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
÷இது குறித்து மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை கூறியதாவது: பெரம்பூர் அருகே வியாசர்பாடி } புளியந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் கணேசபுரம் சுரங்கப்பாதை உள்ள இடத்தில் ரூ. 61.70 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
÷இதற்கு தேவையான 28 கிரவுண்ட் 1,248 சதுர அடி பரப்புள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இழப்பீட்டுத் தொகையாக ரூ. 13.95 கோடியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
÷மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 2.044 பேருக்கு விளையாட்டுக்கேற்ற சீருடைகளை ரூ. 9.20 லட்சம் செலவில் வழங்கப்பட உள்ளன. நேப்பியர் பாலம் மற்றும் சுற்றுப் பகுதியில் சிறப்பு அமைப்புகள் மூலம் ஒளியூட்டும் வகையில் ரூ. 1.62 கோடியில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி நகர் } மகாகவி பாரதியார் நகரை இணைக்கும் வகையில் கேப்டன் காட்டன் கால்வாயின் குறுக்கே ரூ. 3.52 கோடியிலும், ஓட்டேரி நல்லா கால்வாய் குறுக்கே ரூ. 2.19 கோடியிலும் பாலம் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மழையால் சேதமுற்ற சாலைகள்… சென்னையில் ஆண்டுதோறும் சாலைப் பணிகளுக்காக ரூ. 150 கோடி ஒதுக்கப்படுகிறது.
÷இதுதவிர மழையால் சேதமுற்ற சாலைகளை தாற்காலிகமாக சீரமைக்க ரூ. 3.30 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இப் பணிகள் விரைவில் தொடங்கும். எளிதில் சேதமுறாத தரமான சாலைகளை அமைக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரைவில் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களின் பங்கேற்புடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ரிப்பன் மாளிகை சீரமைப்பு: மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகை கட்டடத்தை சீரமைக்கும் பணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிறுவனம் உரிய காலத்துக்குள் விவரங்களை அளிக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கான நியமனம் ரத்து செய்யப்படுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனையைப் பெறுவதுடன் இப் பணிக்கு 3}ம் நபர் ஆலோசகராக நியமித்து பணி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாலாஜா சாலையில் அண்ணா சாலை முதல் காமராஜர் சாலை வரை பெட்டக வடிவ மழைநீர் வடிகால்கள் ரூ. 1.20 கோடியில் அமைக்கப்படும். சென்னையில் சொத்து வரியாக 5 லட்சம் பேரிடம் இருந்து இந்த ஆண்டு ரூ. 375 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 சதவீதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.