தினமணி 08.02.2010
பிப்.14 வரை வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து: ஆட்சியர்
ராமநாதபுரம், பிப். 7: ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தாய், சேய் நல விடுதியில், ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து ஞாயிற்றுக்கிழமை முகாமை துவக்கி வைத்தார் ஆட்சியர். அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் 1152 மையங்கள் மூலமாக ஒரு லட்சத்து 28,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 4572 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மண்டபம் இலங்கைத் தமிழர்கள் முகாம் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள், ரயில்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் இம்மாதம் 14 ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விடுபட்டுப் போன குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் உமா மகேசுவரி, நகர்மன்றத் தலைவர் லலிதகலா ரெத்தினம், துணைத் தலைவர் ராஜா உசேன், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ராஜு, ரவிசங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.