தினமலர் 09.02.2010
நெல்லையில் பிளாஸ்டிக்கை ஒழிக்க மாநகராட்சி இந்தியா சிமென்ட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் : தினமும் 1.4 மெட்ரிக் கழிவுகள் அகற்றம்
திருநெல்வேலி : பிளாஸ்டிக்கை ஒழிப்பது சம்பந்தமாக நெல்லை மாநகராட்சிக்கும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நெல்லை மாநகராட்சியில் நாள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் எரியுலையில் இட்டு அழிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் படி நெல்லை மாநகராட்சியும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. ஒப்பந்தம் மாநகராட்சி மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் முன்னிலையில் கமிஷனர் பாஸ்கரன், இந்தியா சிமென்ட்ஸ் முதன்மை துணைத்தலைவர் நந்தகுமார் கையெழுத்திட்டனர். இதில் துணைமேயர் முத்துராமலிங்கம், மண்டல தலைவர்கள் சுப.சீத்தாராமன், மைதீன், சுப்பிரமணியன், இந்தியா சிமென்ட்ஸ் முதுநிலை பொதுமேலாளர் முருகேசன், சுகாதார அதிகாரி கலு.சிவலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், கவுன்சிலர் தியாகராஜன், சுப்பையாபாண்டியன், நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறுகையில், “மாநகராட்சி பகுதிகளில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே இதை ஒழிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தினமும் மாநகராட்சியில் இருந்து 1.4 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது என்றார்‘.