தினமணி 02.03.2010
புதிய தலைமை செயலகத்தை சுற்றி ரூ. 14 கோடியில் நான்கு வழி சாலை மின் விளக்குகள், பூங்கா, புல்வெளி
சென்னை, மார்ச்.1: புதிய தலைமைச் செயலக வளாகத்தைச் சுற்றிலும் நான்கு வழி சாலைகள், பூங்கா, புல்வெளிகள் மற்றும் நவீன மின் விளக்குளை அமைக்க ரூ. 14 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ. 450 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமைச் செயக வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது.
இந்தப் பணிகளை மார்ச் 8}ம் தேதிக்குள் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர மேயர் மா. சுப்பிரமணியம் தலைமையிலான உயர் நிலைக் குழு, இந்தத் திட்டப் பணிகளை இரவு பகலாக நிறைவேற்றி வருகிறது. இந்தப் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு விவரம்:
அண்ணாசாலை (அண்ணா சிலை முதல் மேம்பால ரயில் பாலம் வரை), சுவாமி சிவானந்தா சாலை உள்ளிட்ட 9,600 சதுர அடி பரப்பில் சர்வதேச தரத்தில் போக்குவரத்து வசதிகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும்.
இந்தச் சாலைகள் அனைத்தும் 19 மீட்டர் அகலமுடையதாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையோரங்களின் இருபுறமும் தலா 2 மீட்டர் அகலமுள்ளதாக நடைமேடைகள் (பிளாட்பாரம்) ரூ. 74 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளன.
தார்ச்சாலைகள்} ரூ. 1.11 கோடி, நடைபாதை} ரூ. 30 லட்சம், சாலை மைய மேம்பாடு} ரூ. 50 லட்சம், சென்னை தொலைக்காட்சி அருகே பக்கிங்ஹாம் கால்வாய் பாலம் சீரமைப்பு ரூ. 85 லட்சம்.
மழைநீர் வடிகால் வசதி} 15 லட்சம், 68 மின் விளக்குகள் நிறுவ} ரூ. 48 லட்சம், கூவம் கரை மேம்பாடு, புல்வெளி அமைத்தல் ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வாலாஜா சாலை: இந்தச் சாலை 310 மீட்டர் நீளமும், 29 மீட்டர் அகலமுள்ளதாக 4 வழிச்சாலையாக ரூ. 9 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
நடைபாதை மேம்பாடு (கேரேஜ் வால்க்) ரூ. 62 லட்சம், தார்ச்சாலை அமைத்தல் ரூ. 1.77 கோடி, நடைமேடை அமைத்தல் ரூ. 67 லட்சம், சாலை மையம் மேம்பாடு} ரூ. 48 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.
“லிஃப்ட்’ வசதியுடன் நடை மேம்பாலம்: வாலாஜா சாலையில் இரு முக்கிய இடங்களில் “லிஃப்ட்’ வசதியுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.