தினமணி 16.09.2009
மாவட்ட கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 14 பதவிகளுக்கு அக்.7-ல் தேர்தல்
நாமக்கல், செப். 15: நாமக்கல் மாவட்டத்தில் காலியாகவுள்ள மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 14 பதவிகளுக்கு அக்.7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் புதன்கிழமை துவங்குகிறது.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 10-வது வார்டு (பொது), கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சி மன்றத் தலைவர், திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர் 26-வது வார்டு (பொது) ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இவை தவிர லத்துவாடி ஊராட்சி வார்டு 2, புன்செய் புதுப்பாளையம் வார்டு 1, பைல்நாடு வார்டு 2, சிங்கிலிப்பட்டி வார்டு 4, மரூர்பட்டி, வார்டு 1, நாவல்பட்டி வார்டு 1, வாழவந்தி கோம்பை வார்டு 1, சீராப்பள்ளி வார்டு 1, கூடச்சேரி வார்டு 1, பல்லக்காபாளையம் வார்டு 3, புதுபுளியம்பட்டி வார்டு 1 ஆகிய ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை (செப்.16) துவங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சி கவன்சிலருக்கான வேட்பு மனுவை மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் தாக்கல் செய்யலாம். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான மனுவை அந்தந்த ஒன்றியங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனுவை அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தாக்கல் செய்ய வேண்டும். செப்.24-ல் வேட்பு மனுக்கள் குறித்து பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 26-ம் தேதி கடைசி நாள். அக்.7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என ஆட்சியர் சகாயம் தெரிவித்துள்ளார்.