குடிசை மாற்று வாரியம் மூலமாக 14,040 கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டம்
கோவை: கோவை மாவட்டத்தில் புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு 14,040 கான்கிரீட் வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் இலக்கு வைத்துள்ளது.
கோவை மாநகரில் மாநகராட்சி சார்பில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் குடிசை பகுதி வீடுகள் மேம்பாட்டு திட்டம் (பி.எஸ்.யு.பி) செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் நீர் நிலை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 9,600 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் உக்கடத்தில் புதை மண் இருப்பதால் அங்கே வீடுகள் கட்டும் திட்ட கூடாது என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே குடிசை மாற்று வாரியத்தினர் கட்டிய 48 வீடுகள் விரிசல் விட்டு சாய்ந்த நிலையில் இருக்கிறது. இந்த வீடுகளில் ஏழை மக்கள் குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளது.
நகர்ப்பகுதியில் குளம், வாய்க்கால், நீர் நிலைகளில் வசிக்கும் மக்களுக்காக குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மதுக்கரை எம்.ஜி.ஆர் நகரில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் 3.48 ஏக்கரில் 512 வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்துள்ளது.
எம்.ஜி.ஆர் நகரை தொடர்ந்து மலுமிச்சம்பட்டி, வெள்ளானைப்பட்டி, கீரணத்தம், விவோனந்தா சதுக்கம், காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.
குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ வரும் 2017ம் ஆண்டிற்குள் கோவையில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் நோக்கத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. சுகாதாரமான, அமைதியான சூழ்நிலையில் அடுக்குமாடிகள் உருவாக்கப்படுகிறது.
14,040 வீடுகள் கட்டும் பணி விரைவில் தீவிரப்படுத்தப்படும். இதை ஏழை மக்கள் கட்டாயம் வரவேற்பார்கள். அடுத்த கட்டமாக ராஜீவ்காந்தி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் பல அடுக்குமாடி வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கிறோம். புதிய கான்கிரீட் வீடுகளின் மூலம் குளம், நீர்தேக்கங்களில் உள்ள குடிசைகளை ஏழை மக்கள் காலி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. நீர் நிலையில் வசிக்கும் மக்களின் அவல நிலை மாறும், ’’ என்றார்.