தினமலர் 05.02.2010
அரியலூரில் ரூ.14.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை ஸ்டாலின் துவக்கி வைத்தார்
அரியலூர்:பெரம்பலூர், அரியலூரில் நேற்று நடந்த அரசு விழாக்களில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ. 332 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.அரியலூர் மாவட்டம் தேளூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கல், பல்வேறு புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பெல்லா வரவேற்றார். பின்னர் ரூ.71 கோடியே 3 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.94 கோடியே 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 95 கட்டடங்களை திறந்து வைத்தும், ஆயிரத்து 600 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.14 கோடியே 21 லட்சம் மதிப்பில் சுழல்நிதி மற்றும் ரூ.180 கோடியே 97 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:ஜாதி, மதங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கருணாநிதி இந்த சமத்துவபுர திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். அவரது கருத்தினை போல நாம் ஒற்றுமையுடனும், ஜாதி, மத பாகுபாடின்றியும், சமத்துவபுர திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி, சமூகத்தில் ஒற்றுமையுடனும், தோழமையுடனும் வாழ வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேசுகையில், அரியலூர், பெரம்பலூர் பகுதிக்கும் 3 ஜி சேவையை விரைவில் மத்திய அமைச்சர் ராஜா செயல்படுத்த வேண்டும் என்றார்.மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், நாம் என்ன கேட்கப் போகிறோம் என்பதை அறிந்து கேட்கும் முன்பே வழங்குவார் முதல்வர் கருணாநிதி. பக்தனின் கோரிக்கையை இறைவன் எப்படி உயர்ந்து அருள்பாலிக்கிறாரோ அதேபோல் கருணாநிதி இறைவனாக இருந்து திட்டங்களை வழங்குகிறார். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் 3 ஜி சேவை தொடங்கப்படும் என்றார்.வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பேசுகையில், தமிழக முன்னேற்றத்திற்கும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் பாடுபடும் திமுக அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.ஆண்டிமடம் எம்.எல்.ஏ. சிவசங்கர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தை துவக்கி வைத்த துணை முதல்வர் இந்த மாவட்ட காப்பாளராக செயல்படுவார். அரியலூர் மாவட்டத்திற்கான காவல்துறை அலுவலகங்களை அமைக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் பாலிடெக்னிக் அமைக்க வேண்டும் என்றார்.
அரியலூர் எம்.எல்.ஏ. அமரமூர்த்தி பேசுகையில், துணை முதல்வர் மத்திய அரசிடம் பேசி அரியலூர்– தஞ்சைக்கு ரயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.விழாவில் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவி கொடியரசி, தா.பழூர் ஒன்றிய சேர்மன் கண்ணன், டிஆர்ஓ பிச்சை, தேளூர் ஊராட்சி தலைவர் காமராஜ், முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் திட்ட இயக்குநர் வசந்தி நன்றி கூறினார்.