தினமலர் 20.04.2010
சென்னை நகரில் வெள்ள பாதிப்பை தடுக்க…ரூ.1,447 கோடி! : ஆறுகள், வடிகால்களை சீரமைக்க அரசு திட்டம்
சென்னை : ‘சென்னை நகரில் வெள்ள பாதிப்பை தடுக்க, 1,447 கோடி ரூபாயில் வடிகால்கள் சீரமைக்கும் பணி இந்தாண்டு துவங்கி மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும்‘ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில், முதல்வர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் கூறப்பட் டிருப்பதாவது: சென்னை நகரில் வெள்ள பாதிப்பை தடுக்க பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் – அரும்பாக்கம் வடிகால், கூவம் மற்றும் அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களை சீரமைக்க, ஒருங்கிணைந்த வரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும். மொத்த திட்ட மதிப்பீடு 1,447 கோடியே 91 லட்ச ரூபாய். இதில், நீர்வள ஆதாரத் துறைக்கு 633 கோடியே மூன்று லட்சமும், சென்னை மாநகராட்சிக்கு 814 கோடியே 88 லட்சமும் வழங்கப் பட்டுள்ளது. மழைநீர் வடிகால்கள் போன்ற சிறிய வடிகால்கள், மாநகராட்சி மூலம் சீரமைக்கப்படும். வடக்கு வடிநிலம் திட்டத்திற்கு 82 கோடியே 69 லட்ச ரூபாய், மத்திய வடிநில திட்டங்களுக்கு 83 கோடியே 89 லட்ச ரூபாய், கிழக்கு வடிநில திட்டங்களுக்கு 303 கோடியே 67 லட்ச ரூபாய், தெற்கு வடிநில திட்டங்களுக்கு 162 கோடியே 78 லட்ச ரூபாய் என மொத்தம் 633 கோடியே மூன்று லட்ச ரூபாய் நீர்வள ஆதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. இத்திட்டம், நடப்பாண்டில் துவக்கி, மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.