தினகரன் 20.05.2010
கோபி நகராட்சி கூட்டத்தில் 149 தீர்மானங்கள் நிறைவேறின 5 மாத பரபரப்பு முடிவுக்கு வந்தது
கோபி, மே 20: கோபி நகராட்சி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன் 13ல் இருந்து 18ஆக உயர்ந்தது. இதனால், நகராட்சியில் தி.மு.க. காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் நடந்த நகராட்சி கூட்டத்தில் நகராட்சி தலைவர் ரேவதிதேவி(அ.தி.மு.க.) உடல்நலம் இல்லாததால் கலந்து கொள்ளாத நிலையில் தி.மு.க.வை சேர்ந்த நகராட்சி துணைத்தலைவர் மோகனாம்பாள் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் அனைத்து தீர்மானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டது.
3 ஆண்டுகளாக நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி வளர்ச்சிப்பணி எதுவும் நடைபெறவில்லை என்பதாலேயே அந்த தீர்மானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டதாக துணைத்தலைவர் மோகனாம்பாள் அறிவித்தார். தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை நகராட்சி கூட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட வில்லை.
இதனால், நகராட்சி பகுதியில் வீடு, தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் கட்ட அனுமதி கேட்டிருந்த விண்ணப்பங்கள், குடிநீர் இணைப்பு கேட்டு வந்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.நகராட்சி பகுதி முழுவதும் சாலை அமைப்பு பணிகளும் முடங்கின. இதனால் சாலை மிகவும் மோசமாகி விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலையில் நகராட்சி கவுன்சில் சாதாரண கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க.கவுன்சிலர்கள் காஞ்சனாதேவி, ராஜாமணி, பிரகாசம், திலீப், ராக்கியண்ணன், மகேஸ்வரி ஆகியோரும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் கனகராஜ், கோபிநாத், முரளிஸ்ரீதர். மாரிமுத்து ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து 12 மணியளவில் அவசர கூட்டம் நடந்தது. தி.மு.க.கவுன்சிலர்கள் மகேஸ்வரி, திலீப், ராக்கியண்ணன், பிரகாசம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் 101 தீர்மானஙகள் நிறைவேற்றப்பட்டன. இதனால் கடந்த 5 மாத காலமாக நகராட்சியில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.