மாலை மலர் 14.12.2010
ரூ. 15 கோடி செலவில், சென்னையில் 24 மணி நேரம் செயல்படும்; 7 மகப்பேறு மருத்துவமனைகள் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, டிச. 14- சென்னை மாநகராட்சி கட்டிடத்துறை சார்பில் புளியந்தோப்பு, திருவேங்கடம் சாலையில் 24 மணி நேர நவீன மகப்பேறு மருத்துவமனை கட்டுமான பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக 24 மணி நேர மகப்பேறு மருத்துவ மனைகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அயனாவரத்தில் ஏற்கனவே யுனைடெட் இந்தியா நகர் முதல் பிரதான சாலை யில் ரூ.1 கோடியே 34 லட்சம் செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புளியந்தோப்பில் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டிடப்பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் திங்களில் பணி தொடங்கப்பட்டது. இதில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் 40 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், சுகப்பிரசவ மையத்துடன் கூடிய மருத்துவமனை, மின் தூக்கி, சாய்தளம், அறுவைச் சிகிச்சை அரங்குகள், கழிப்பறைகள், புற நோயாளிகள் பிரிவு ஆகிய வசதிகளுடன் நவீன முறையில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி வருகின்ற ஏப்ரல் திங்களில் முடிக்கப்படும்.
அதேபோன்று மண்டலம்-2, வார்டு-15ல் சஞ்சீவ ராயன் பேட்டை, சோலையப்பன் தெருவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவ மனை 20 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், ரூ. ஒரு கோடியே 8 லட்சத்திலும், மண்ட லம்-5, வார்டு-55ல் செனாய் நகர், புல்லா அவன்யூவில் 27 படுக்கை வசதிகளுடன், ரூ.1 கோடியே 24 லட்சம் செலவிலும், மண்டலம்-6, வார்டு-93ல் மீர்சாகிப் பேட்டையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவ மனையினை புதுப்பித்து,
ரூ. ஒரு கோடியே 39 லட்சத் திலும், மண்டலம்-8, வார்டு– 120ல் ஏற்கனவே உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையை புதுப்பித்து, 35 படுக்கைகளுடன் ரூ. ஒரு கோடியே 50 லட்சம் செலவிலும், மண்டலம்-10, வார்டு-151ல் அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் புதிய 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை 30 படுக்கைகளுடன் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய மருத்துவமனை, ரூ. 2 கோடியே 30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. ஐந்து 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளை துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஜனவரி மாதம் திறந்து வைக்கிறார்.
அதேபோன்று சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் 60 படுக்கைகளுடன் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி ரூ. 3 கோடியே 96 லட்சம் செலவிலும், புளியந்தோப்பில் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளின் கட்டிடப்பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முடிக்கப்பட்டு திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் புரசைவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, நிலைக் குழுத்தலைவர் (சுகாதாரம்) மணிவேலன், மண்டலக் குழுத்தலைவர் கன்னியப்பன், மன்ற உறுப்பினர்கள் வேம்பாத்தம்மாள், எழிலழகன், தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.