தினமணி 22.01.2010
சாலைகள் அமைக்க ரூ.1.5 கோடி மதிப்பு நிலம் தானம்
திருப்பூர், ஜன.21: புதிய சாலைகள் அமைப்பதற்காக ரூ.1.5 கோடி மதிப்புடைய தனியார் நிலங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தானமாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரை அழகுபடுத்தும் பணியின் ஒருபகுதியாக மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதுடன், புதிய சாலைகளும் அமைக்கப்படுகின்றன.
அதன்படி, மங்கலம் சாலைக்கு வலதுபுறம் ஆலாங்காடு அறிவுத்திருக்கோயில் பகுதியில் இருந்து பாரப்பாளையம் வடக்குத்தோட்டம் வரை நொய்யல் ஆற்றுக்கு தென்புறம் சுமார் 1 கி.மீ நீளத்தில் 30 முதல் 50 அடி அகலத்தில் புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அப்பகுதியுள்ள தனியார் நிலங்களை மாநகராட்சி நிர்வாகம் தானமாகப் பெற்று வருகிறது.
முதற்கட்டமாக, மாடர் டையிங் உரிமையாளர் சரோஜினிவெள்ளியங்கிரி 100 அடி நீளம், 30 அடி அகலம் என 3000 சதுர அடி நிலத்தை மாநகராட்சியிடம் தானமாக ஒப்படைத்தார். அதன்தொடர்ச்சியாக, தற்போது அப்பகுதியைச் சேர்ந்த ஈ.பத்மஜெயந்தி என்பவர் 9,000 சதுரஅடி நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
தானமாக பெறப்பட்ட இந்நிலங்களின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி.இந்நிலங்களின் கிரயப்பத்திரத்தை மேயர் க.செல்வராஜிடம் 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் என்.கணேஷ் ஒப்படைத்தார். அப்போது, துணை மேயர் கே.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, அதிமுக மாமன்ற குழுத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.