தினமணி 02.02.2010
15 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி
சென்னை, பிப். 1: தியாகராயநகரில் சாலையை ஆக்கிரமித்திருந்த 15 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அதிரடியாக அகற்றினர்.
சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில், தியாகராயநகரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
தியாகராயநகர் பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள மேட்லி சாலை, கில்டு சாலை, நடேசன் சாலை, முத்துரங்கம் சாலை ஆகிய பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்தும், நடைபாதையிலும் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பகுதியை மேயர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அப்போது மேட்லி சாலையில் 5 துரித உணவகங்கள், நடேசன் சாலையில் 4 துரித உணவகங்கள், ஒரு டீ கடை, சிப்ஸ் கடை, குளிர்பானக் கடை ஆகியனவும், கில்டு சாலையில் ஒரு துரித உணவகமும், முத்துரங்கம் சாலையில் 2 துரித உணவகங்களும் நடைபாதைகளை ஆக்கிரமித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்த இந்தக் கடைகளை உடனடியாக அகற்றுமாறு, அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்தக் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. கில்டு சாலையில் குவிந்திருந்த குப்பைகளும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
மாநகராட்சிக்கு வரி நிலுவை: ஒரே நாளில் ரூ.60 லட்சம் வசூல்
மதுரை, பிப்.1: மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை ஒரே நாளில் ரூ.60 லட்சம் வசூலானதாக ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநகராட்சி வரி இனங்களான சொத்து வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை வரிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளவற்றை வசூலிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு குழுவுக்கு 2 வார்டுகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தெற்கு மண்டலத்தில் 25 இணைப்புகள், மேற்கு மண்டலத்தில் 15 இணைப்புகள், வடக்கு மண்டலத்தில் 25 இணைப்புகள், கிழக்கு மண்டலத்தில் 10 இணைப்புகள் என மொத்தம் 75 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதேபோல வாடகை செலுத்தாத கடைகளுக்குப் பூட்டு போடப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.60 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. எனவே வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக அவற்றை செலுத்தி மாநகராட்சியின் நடவடிக்கையைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.