தினமணி 03.02.2010
15 வட்டாரங்களில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கை
நாமக்கல், பிப். 2: நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 15 வட்டாரங்களில் வீடுதோறும் சென்று தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன்குனியா, மலேரியா, டெங்கு மற்றும் இதர தொற்று நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 வட்டாரங்களிலும் தலா 10 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வீடுதோறும் சென்று கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீர்நிலைகளில் கொசுப் புழுக்களை அழிக்க மருந்து தெளித்தல், வீடுகளில் பயன்படுத்தப்படும் தேக்கி வைத்த தண்ணீரில் அபேட் மருந்து தெளித்தல், கொசுப் புகை அடித்தல், கொசு ஒழிப்பு மருந்து அடித்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எருமப்பட்டி வட்டாரத்தில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் வட்டாரத்துக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று அபேட் மருந்து தெளித்து வருகின்றனர்.
தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பதுடன், வீடுகளுக்கு அருகிலோ, தெருக்களிலோ தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வீடுதோறும் வந்து அபேட் மருந்து தெளிக்கும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சி. சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.