தினமணி 08.02.2010
1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
நாகர்கோவில், பிப். 7: கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இம்முகாம் 2-ம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயபால் எம்.எல்.ஏ, போலியோ தடுப்பு சொட்டு மருந்து தென் மண்டல கண்காணிப்பாளர் லியாகத்அலி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மதுசூதனன், ஆசாரிப்பள்ளம் பேரூராட்சித் தலைவர் வில்லியம், தமிழ் இனியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டுமருந்து வழங்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகளுக்கு வசதியாக கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை, காந்தி மண்டபம் உள்ளிட்ட 1160 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இப்பணியில் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் 4 ஆயிரத்து 640 பேர் ஈடுபட்டனர்.