தினமணி 20.02.2010
கொடுமுடி பகுதியில் ரூ.15 லட்சத்தில் பணிகள்
கொடுமுடி, பிப்.19: வெங்கம்பூர் மற்றும் கொடுமுடி பேரூராட்சிகளில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியின் கீழ், ரூ.15.15 லட்சம் மதிப்பீட்டில் 5 திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கரட்டாம்பாளையத்தில் ரூ.55 ஆயிரம் மதிப்பீட்டில் நிழற்குடை, விருப்பம்பாளையத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பிக்கவும் பூஜை நடைபெற்றது. வெங்கம்பூர் வரதராஜப் பெருமாள் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கே.எஸ்.ஆர்.பெரியசாமி, பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, செயல் அலுவலர் எஸ்.எம்.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொடுமுடி பேரூராட்சிக்கு உட்பட்ட நகப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க நடைபெற்ற பூஜையில் பெற்றோர்– ஆசிரியர் கழகத் தலைவர் சி.பெரியசாமி, துணைத் தலைவர் ஜி.என்.மணி, பொருளாளர் எம்.எஸ்.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கணபதிபாளையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள், தளுவம்பாளையத்தில் ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை தண்ணீர்த் தொட்டி கட்டவும் பூமிபூஜை நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் எஸ்.ராஜேஸ்வரி, தங்கவேல், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.