தினமலர் 23.02.2010
தென்காசியில் ரூ.15 ஆயிரம்கலப்பட தேயிலை பறிமுதல்
தென்காசி:தென்காசியில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட தேயிலையை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தென்காசியில் கலப்பட தேயிலை, கெட்டுப்போன முந்திரி பருப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து நெல்லை பொது சுகாதார துறை துணை இயக்குநர் மீரான்மைதீன் உத்தரவின் பேரில் தென்காசி நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப் தலைமையில் உணவு ஆய்வாளர் ஹக்கீம், துப்புரவு அலுவலர் டெல்விஸ்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஜப்பார், மேற்பார்வையாளர்கள் தங்கவேலு, காசி உள்ளிட்டோர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
கலப்பட தேயிலை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படும் வீடு ஆபாத் பள்ளிவாசல் அருகே இருப்பது தெரிய வந்தது. இந்த வீட்டிற்குள் சென்ற நகராட்சி அதிகாரிகள் அங்கு பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த தேயிலை மற்றும் முந்திரி பருப்புகளை ஆய்வு செய்தனர். தேயிலை கலப்படம் என்றும், முந்திரி பருப்பு கெட்டு போனவை என்றும் தெரிய வந்தது.இவற்றின் மாதிரியை சோதனைக்காக அதிகாரிகள் எடுத்தனர். சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட தேயிலை, கெட்டு போன முந்திரி பருப்பு பார்சல்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை விற்பனைக்கு வைத்திருந்த திவான் மைதீன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கலப்பட தேயிலை, கெட்டு போன முந்திரி பருப்பு கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு தென்காசி பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புரோட்டா கடைகளில் சால்னாவிற்கு இந்த கெட்டு போன முந்திரி பருப்பு பயன்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.