தினமணி 23.02.2010
தென்காசியில் ரூ. 15 ஆயிரம் கலப்பட டீ தூள் பறிமுதல்
தென்காசி, பிப். 22: தென்காசியில் திங்கள்கிழமை ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான கலப்பட டீ தூள் மற்றும் கெட்டுப்போன முந்திரி பருப்புகளை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி பொது சுகாதார துணை இயக்குநர் மீரான்மைதீன் உத்தரவின்படி, தென்காசி நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீப் தலைமையில் உணவு ஆய்வாளர் ஹக்கீம், துப்புரவு அலுவலர் ராஜ், ஆய்வாளர் ஜப்பார், மேற்பார்வையாளர்கள் தங்கவேலு, காசி உள்ளிட்டோர் தென்காசி பகுதியில் திங்கள்கிழமை கலப்பட டீதூள் மற்றும் கலப்பட உணவுப் பொருள்கள் குறித்து சோதனை மேற்கொண்டனர்.
தென்காசி ஆபாத் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த திவான் மைதீனுக்கு சொந்தமான கட்டடத்தில் சோதனையிட்டபோது, ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான கலப்பட டீதூள் மற்றும் கெட்டுப்போன முந்திரி பருப்புகளை கைப்பற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.