தினமலர் 15.04.2010
15 வேலம்பாளையம் அலுவலகம் :துணை முதல்வர் திறக்க திட்டம்
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் மூன்றாம் நிலை நகராட்சியில் புதிய அலுவலகம் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது.வரும் 2011ல், திருப்பூர் மாநகராட்சியோடு 15 வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் மற்றும் எட்டு ஊராட்சிகள் இணைய உள்ளன. இதற்காக, இவ்விரண்டு நகராட்சிகளிலும் புதிய அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. நல்லூர் நகராட்சி அலுவலகம் கிழக்கு மண்டல அலுவலகமாகவும், 15 வேலம்பாளையம் நகராட்சி அலுவலகம் வடக்கு மண்டலமாகவும் செயல்படும். இவ்விரு அலுவலகங்களும் தலா 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன.15 வேலம்பாளையம் அலுவலக பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து, பூச்சு வேலைகள் நடந்து வருகின்றன. முதல் மாடியில் பணிகள் முடிவடைந்ததும் திறக்கப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம், கோவையில்உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு வரும் துணை முதல்வர் ஸ்டாலின், 15 வேலம்பாளையம் நகராட்சி கட்டட திறப்பு விழாவுக்கு வருவார், என நகராட்சி தலைவர் மணி தெரிவித்தார்.