தினமணி 16.04.2010
பசுபதிபாளையம் எரிவாயு மயானம் 15 நாள்களில் பயன்பாட்டுக்கு வரும்
கரூர், ஏப். 15: கரூர் பசுபதிபாளையத்திலுள்ள எரிவாயு மயானத்தை “ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் கரூர் கோட்டை’ பராமரிப்புப் பணிகள் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதையடுத்து, இந்த மயானம் இன்னும் 15 நாள்களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கரூர் நகராட்சி பாலம்மாள்புரத்தில் எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த மயானம் அறக்கட்டளை மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பசுபதிபாளையம் பகுதியில் சுமார் ரூ. 80 லட்சத்தில் புதிய எரிவாயு மயானம் கட்டப்பட்டது.
இந்த மயானத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், அதைப் பராமரிக்கவும் அதிக நிதித் தேவைப்படுகிறது. இதனால், இந்த மயானத்தை தனியார் அமைப்புகள் எடுத்து பராமரிக்க வேண்டுமென நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இந்த மயானத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்பதாக “ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல், கரூர் கோட்டை’ அறிவித்தது.
எனவே, மயானத்தை முறைப்படி ஒப்படைக்கும் நடைமுறைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த மயானத்தை ஜேசிஐ தேசிய உதவித் தலைவர் எஸ். பாலவேலாயுதம் வியாழக்கிழமை பார்வையிட்டார். அப்போது, மண்டல இயக்குநர் செந்தில்ராஜா, கரூர் சாசனத் தலைவர் தே. அன்பழகன், தலைவர் எம். சரவணன், அறக்கட்டளைத் தலைவர் போ. சிவராமன், அறங்காவலர்கள் சக்திவேல், டி. சரவணன், நகராட்சித் தலைவர் பி. சிவகாமசுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து பாலவேலாயுதம் கூறியது:
மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு தலைமைத்துவப் பயிற்சித் துறையில் கவனம் செலுத்தி வந்த நாங்கள், முதல் முறையாக இந்தப் பணியை எடுத்துள்ளோம். பூர்வாங்க ஒப்பந்த நடவடிக்கைகள் நிறைவுப் பெற்ற பின்பு, 15 நாள்களில் இந்த மயானம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் முதல் முறையாக எரிவாயு மயானத்தை பராமரிக்கும் பொறுப்பை கரூரில் ஜேசிஐ எடுத்துள்ளது என்றார் அவர்.