தினமணி 02.08.2010
ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை திறப்பது எப்போது?
திருப்பூர், ஆக.1: ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பல்வேறு காரணங்களால் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிப்பிடத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அக்கழிப்பிடத்தை உடனடியாக திறக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
÷திருப்பூர் மாநகராட்சி 41வது வார்டு சுகுமார் நகர் கிழக்கு பகுதியில் மாநகராட்சி பொதுநிதி ரூ.15 லட்சத்தில் இருந்து கடந்த 2007ம் ஆண்டில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. அக்கழிப்பிடத்துக்கு முதலில் தண்ணீர் வசதி இல்லாததால் அருகிலுள்ள ஆழ்குழாய்க் கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அப்பகுதி மக்கள் அதற்கு சம்மதிக்காததால் புதியதாக ஆழ்குழாய்க் கிணறு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல மாதங்கள் காலம் தாழ்த்தியது.
÷பிறகு, அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கைகளை அடுத்து அப்பொதுக் கழிப்பிடத்துக்கு அருகிலேயே ஆழ்குழாய்க் கிணறும் அமைக்கப்பட்டது. இருப்பினும், அந்த மின்இணைப்பு வழங்குவதில் மின்சார வாரியம் தொடர்ந்து இழுபறி செய்ததால் பொதுக் கழிப்பிடத்தை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்படி, பல மாதங்களுக்கு பிறகு மின் இணைப்பு கிடைத்த நிலையில் பொதுக் கழிப்பிடத்தில் இருந்த மின்விளக்குகள் மர்மநபர்களால் திருடப்பட்டும், கழிப்பிட கதவுகள், சுவர்கள் உடைக்கப்பட்டும் உள்ளன. அவற்றை சீர்செய்து உடனடியாக பொதுக்கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
÷இதுகுறித்து 41வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏ.ஷாஜகான் கூறுகையில், சுகுமார் நகரில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடத்தை திறப்பதில் மாநகராட்சி நிர்வாகம் உரிய அக்கறை செலுத்தவில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தினம் தினம் கடும் அவதிக்குள்ளாவதுடன், இரவு நேரங்களில் சாலையோரங்களை பொதுக் கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரமும் சீர்கெட்டுள்ளது. இதை உணர்ந்து உடனடியாக அக்கழிப்பிடத்தை திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.