தினமணி 22.09.2009
15 நாள்களுக்குள் வருங்கால வைப்புநிதியை வழங்க வேண்டும் .
கரூர், செப்.21: நகராட்சி பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வருங்கால வைப்புநிதி முன்பணம், விண்ணப்பம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களில் வழங்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வெ. சுப்புராமன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ். முத்துசாமி முன்னிலை வகித்தார். பொருளர் ம. அந்தோணிசாமி வரவு–செலவு அறிக்கை வாசித்தார். இணைச் செயலர் கோ. இளங்கோ, துணைத் தலைவர்கள் சு. முருகன், எஸ். செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் சு. காசிவிஸ்வநாதன், கல்வி மாவட்டத் தலைவர் எம். சின்குமார் ஆகியோர் பேசினார்.
கூட்டத்தில், சமச்சீர் கல்விக்கு உத்தரவிட்ட முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது, வருங்கால வைப்புநிதி முன்பணம் பெறுவதற்கு விண்ணப்பித்த 15 நாள்களில் பணம் வழங்க வேண்டும், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து போராடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலர் செ. முத்தரசப்பன் வரவேற்றார். அமைப்புச் செயலர் து. தமிழரசன் நன்றி கூறினார்.