தினமணி 15.12.2011
15 மண்டலங்களுக்கும் தானியங்கி துப்புரவு இயந்திரம்
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் 10 மண்டலங்களாக இருந்தது.
அப்போது சாலைகளில் தேங்கும் குப்பைகளை அள்ளுவதற்காக 5 தானியங்கி துப்புரவு இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இந்த இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள வட்டவடிவமான துடைப்பம் போன்ற அமைப்பு சாலைகளை சுத்தப்படுத்தும். குப்பைகள் இயந்திரத்தில் சேமிக்கப்படும். அதன்பிறகு மொத்தமாக அந்தக் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும்.
இந்த இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி விரைவாக நடப்பதுடன் குறைவான பணியாளர்களே தேவைப்படும் என்று கூறப்படுகிறது. ஒரு வாகனம் செல்வது போலவே இதன் செயல்பாடு இருக்குமாதலால் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் இந்த இயந்திரம் மூலம் சுத்தப்படுத்துவது எளிது.
சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பிறகு 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் 200 வார்டுகள் உள்ளன. மொத்த பரப்பளவு 429 சதுர கி.மீ. ஆகும். புதிதாக இணைக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. இதனால் 15 மண்டலங்களிலும் தானியங்கி துப்புரவு இயந்திரத்தை பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்யதுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே 5 தானியங்கி இயந்திரங்கள் இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக 10 தானியங்கி துப்புரவு இயந்திரங்கள் வாங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.