தினகரன் 17.08.2012
மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு
மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு
கோவை,: மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கவுன்சில் சிறப்பு கூட்டம் விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி முன்னிலைவகித்தார்.
கோவை மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, கவுன்சிலர்கள் சிங்கை பாலன் (அ.தி.மு.க), நந்தகுமார், மீனா (தி.மு.க), மகேஸ் (காங்.), மகாதேவன் (பா.ஜ.), ராஜேந்திரன் (ம.தி.மு.க), ராமமூர்த்தி (இ.கம்யூ), சாதிக் அலி (த.மு.மு.க.) ஆகியோர் பேசினர். இதன்பின்னர், மேயர் செ.ம.வேலுசாமி பேசியதாவது: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி தேர்வுசெய்யப்பட்டு 25 லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் விருதும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் கடந்த இரு வாரங்களுக்கு முன் அறிவித்தார். அறிவித்த இரண்டே வாரத்தில், தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் கோவை மாநகராட்சி சிறப்பான மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விருது ஒருவருடைய உழைப்புக்காக கிடைத்தது இல்லை. கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. நம்மை மேலும் செம்மைப்படுத்தவும், மாநகர மக்களுக்கு மேலும் பல பணிகளை திறம்பட செய்யவும் ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த விருது கிடைத்துள்ளது. கட்சி பாகுபாடின்றி, விறுப்பு, வெறுப்பின்றி, 100 வார்டுகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி பேசினார்.
மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் உள்ள வணிக வளாக கடைகளுக்கு மாதம்தோறும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த வாடகையை அதிகபட்சம் 15 சதவீதம் அதிகரிப்பது என்பது உள்பட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.