15 வார்டுகளில் ஆடு, மாடு, கழுதை வளர்க்க தடை
திருச்சி மாநகராட்சியில் 15 வார்டுகளில் ஆடு, மாடு, கழுதைகளை வளர்க்க முற்றிலும் தடை விதித்து புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் உத்தேச தீர்மானம் வைக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக திரியும் ஆடுகளையும், மாடுகளையும் தடை செய்வது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் வைக்கப்பட்ட உத்தேச தீர்மானம்:
ஆடு, மாடுகளை வளர்க்க முற்றிலும் தடை செய்யப்படும் வார்டுகள்: 2, 10, 13, 32, 34, 35, 37, 42, 43, 44, 47, 48, 50, 51, 56. மற்ற வார்டுகளில் சில தெருக்களில் ஆடு, மாடுகளை வளர்க்க அனுமதிக்கலாம்.
வார்டு எண் 52-ல் வண்ணாரப்பேட்டை, 4-ல் அழகிரிபுரம் ஆகிய இரு தெருக்களில் மட்டும் கழுதைகள் வளர்க்கலாம். வேறு எங்கும் கழுதை வளர்க்க முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மாடு ஒன்றுக்கு ரூ. 500, ஆடு ஒன்றுக்கு ரூ. 200, கழுதை ஒன்றுக்கு ரூ. 500 என கட்டணம் விதித்து ஒவ்வொரு ஆண்டும் அனுமதி வழங்கலாம்.இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் வார்டுகளில் மேலும் சில தெருக்களிலும் ஆடு, மாடுகளை வளர்க்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கையை ஆணையரிடம் நேரில் எழுத்து மூலம் அளிக்கலாம் என்றும், அவற்றின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை திருத்தத்துடன் நிறைவேற்றலாம் என்றும் மாமன்றம் ஒப்புதல் அளித்தது.