ஏப். 15-க்குள் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
15 ஆம் தேதிக்குள் நகராட்சிக்கு குடிநீர் கட்டணம், வரி ஆகியவற்றை செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரூர் நகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்து குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி, நகராட்சி கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி உள்ளிட்டவைகளை வசூலிக்க தீவிர வரி வசூல் இயக்கம் நடத்தப்படுகிறது. நகர்மன்ற ஆணையர் (பொ) கோபாலகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடிநீர் கட்டண பாக்கி, சொத்து வரி, நகராட்சி கடை வாடகை பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கரூர் காமராஜ் மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகைக்கு இருந்து நீண்டகாலமாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வரிபாக்கி குறித்து சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
தண்டோரா ஜப்தி வாகனத்துடன் சென்று வரி வசூலில் என நகராட்சி ஊழியர்கள் வரி வசூலிக்க தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், குடிநீர் கட்டணம், தொழில்வரி, கடைவாடகை, புதை சாக்கடை ஆகியவை உள்ளிட்ட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை வரும் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். செலுத்தாவிடில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
மேலும், வரி இனங்களை செலுத்தாதற்கு அபராதக் கட்டணமாக ரூ. 100, குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் கட்டணமாக ரூ. 750, துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை, இணைக்கும் கட்டணமாக ரூ. 750 என நகராட்சி சார்பில் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.