ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலம் மாநகராட்சி வசம் வந்தது
சென்னை:கடந்த, 10 ஆண்டுகளாக வழக்கில் சிக்கிய, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், மாநகராட்சி வசம் வந்தது. இதையடுத்து, அங்கு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி துவங்கியது.
ஆலந்தூர் மண்டலம், 161வது வார்டு முருகன் நகரில், 73 சென்ட் நிலத்தை முருகன் என்பவர், 1980ம் ஆண்டு சி.எம்.டி.ஏ., அனுமதி வாங்கி, பிளாட் போட்டு விற்றார்.
அதில், 8ம் நம்பர் பிளாட், 6 சென்டில் சிறுவர் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டது. தற்போது, அதன் மதிப்பு 1.5 கோடி ரூபாய். அந்த இடத்தை, முருகன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் பராமரித்து வந்தது.
அப்போது இருந்த, ஆலந்தூர் நகராட்சி, அந்த இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க முயன்றது. இந்த நிலையில், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, சிலர் சொந்தம் கொண்டாடி, 2002ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், கடந்த மாதம், எதிர்த்தரப்பு மனுவை ஆலந்தூர் முன்சீப் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், அந்த இடத்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். புதராக இருந்த அந்த இடத்தை, நேற்று மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, சிறுவர் பூங்கா அமைக்கும் பணியை துவக்கினர்.