தினத்தந்தி 25.06.2013
ரூ.15 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்: தாராபுரத்தில் குடிநீர் குழாய்களை பதிக்கும் பணி தீவிரம்
60 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்களை பதிக்கும் பணி தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
குடிநீர் வினியோகம்
தாராபுரம் நகராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அமராவதி
குடிநீர் திட்டம் ஆகிய 2 திட்டங்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு
வினியோகம் செய்யப்படுகிறது. இதில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம்
நாள் ஒன்றுக்கு 45 லட்சம் லிட்டர் குடிநீரும், அமராவதி குடிநீர் திட்டம்
வழியாக தினமும் 35 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கவும் வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மேற்கண்ட 2 திட்டங்கள் மூலம் நகர மக்களின் குடிநீர் தேவையை
பூர்த்தி செய்ய நகராட்சியால் முடியவில்லை. கோடை காலங்களில் அமராவதி திட்டம்
கைவிட்ட நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர்
பற்றாக்குறை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டது.
மின்தடை, குழாய் உடைப்பு மற்றும் தண்ணீர் திருட்டு போன்ற காரணங்களால்
தாராபுரம் நகராட்சிக்கு குடிநீர் வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் தாராபுரத்திற்கு
வறட்சியின்போது அமராவதி திட்டம் கைவிட்ட நிலையில், காவிரி கூட்டு குடிநீர்
திட்டம் மூலம் 30 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைத்தது. இதனால் நகர்
முழுவதும் குடிநீரை சீராக நகராட்சி நிர்வாகத்தால் வினியோகம்
செய்யமுடியவில்லை.
புதிய திட்டம்
எனவே நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கவும், எதிர்கால
மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் ரூ.14.74 கோடி செலவில் சிறிய மற்றும்
நடுத்தர நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தாராபுரம்
நகராட்சி குடிநீர் அபிவிருத்திதிட்டம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7 கோடியே 34 லட்சத்து 63 ஆயிரமாகும்.
மாநில அரசின் பங்கு ரூ.91 லட்சத்து 30 ஆயிரமாகும். நகராட்சி பங்கு ரூ.91
லட்சத்து 30 ஆயிரம். இந்த திட்டத்திற்கு மானியம் 5 கோடி 55 லட்சத்து 71
ஆயிரமாகும்.
இந்த நிதி முலம் அமராவதி ஆற்றில் நீர்சேகரிப்பு கிணறு அமைத்தல்,
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுதல், குடிநீர் உந்து பணிக்கு மோட்டார்
வாங்குதல், குடிநீர் பகிர்மான குழாய்களை பதித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று
வருகின்றன.
அமராவதி ஆற்றில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் வரை 10 கிலோ
மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அதே போல் மேல்நிலை
நீர்தேக்க தொட்டியில் இருந்து அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் குழாய்கள்
50 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தில் பதிக்கும் பணியும் தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
135 லட்சம் லிட்டர் குடிநீர்
இந்த திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது
நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்றும் ஒருவருக்கு நாள்
ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் கொடுக்க முடியும் என்றும், நகர் முழுவதும்
சமச்சீரான குடிநீரை வினியோகம் செய்ய முடியும் என்றும் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.