மாலை மலர் 02.01.2014

சென்னை, ஜன. 2 – தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
முதல்–அமைச்சர்
ஜெயலலிதா 15.1.2013 அன்று தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பில் நடைபெற்ற
கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மண்டபம் திறப்பு விழாவில், தேனி அல்லி
நகரம் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு கர்னல்
ஜான் பென்னிகுயிக்கின் நினைவை போற்றும் வகையில் கர்னல் ஜான் பென்னி குயிக்
பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி,
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் 15 கோடியே 25 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து
நிலையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து
வைத்தார்.
இந்த பேருந்து நிலையத்தில் 59 பேருந்துகள் நிறுத்துவதற்கான
இடவசதிகளுடன் உணவகங்கள், கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, பொருட்கள்
வைப்பறை, நவீன கழிப்பிடம், முன்பதிவு மையங்கள், வரவேற்பு விசாரணை மையம்,
காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர் ஓய்வு அறை, தகவல் தொடர்பு அலுவலர் அறை
உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை நகராட்சியில்
36 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கடலூர் மாவட்டம், பண்ருட்டி
நகராட்சியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள
குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்;
காஞ்சிபுரம் நகராட்சியில் 17
கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத்
திட்டம்; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திருவண்ணாமலை மாவட்டம்,
செங்கம் புதுப்பாளையம் ஒன்றியங்களைச் சார்ந்த 20,314 பேர் பயனடையும்
வகையில் 40 குடியிருப்புகளுக்கு 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான
கூட்டுக் குடிநீர்த் திட்டம்;
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம்
ஒன்றியத்தைச் சார்ந்த குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 18 குடியிருப்புகளைச்
சேர்ந்த 14,547 பேர் பயனடையும் வகையில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்; 6 மாவட்டங்களிலுள்ள 9
பேரூராட்சிகளில் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
நிறைவேற்றப்பட்டுள்ள 10 குடிநீர் வழங்கல் மேம்பாட்டுப் பணிகள்; என மொத்தம்
64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள
சாக்கடைத் திட்டப் பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை
மாவட்டம், திருவத்திப்புரம் நகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம்
நகராட்சியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக்
கட்டடம்; நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு நகராட்சியில் 2 கோடியே 50 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்;
17
மாவட்டங்களில் உள்ள 22 பேரூராட்சிகளில் 7 கோடியே 8 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 அலுவலகக் கட்டடங்கள்; 11 மாவட்டங்களில்
உள்ள 34 பேரூராட்சிகளில் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள 41 சுகாதார வளாக கட்டடங்கள்; திருவாரூர் மாவட்டம், நன்னிலம்
பேரூராட்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக
கட்டடம்; காவேரிப்பட்டினம் மற்றும் குத்தாலம் பேரூராட்சிகளில் 60 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள்;
நான்கு
மாவட்டங்களில் உள்ள 5 பேரூராட்சிகளில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் நவீன இறைச்சி கூடங்கள்; தேனி மாவட்டம்,
கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள பாலம்; என மொத்தம் 19 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி
லான கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும்,
சேலம் மாநகராட்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கடலூர் மாவட்டம்,
சிதம்பரம் நகராட்சியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்
கட்டப்படவுள்ள புதிய அலுவலகக் கட்டடங்கள்;
ஈரோடு மாவட்டம், புஞ்சை
புளியம்பட்டி நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள
பேருந்து நிலையம்; விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகராட்சியில் 1 கோடியே 24
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துப்புரவு பணியாளர்களுக்கான
குடியிருப்புகள்; என 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான
கட்டடங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
மொத்தத்தில்
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட
திட்டப் பணிகளின் மொத்த மதிப்பு 118 கோடியே 2 லட்சம் ரூபாய் ஆகும்.
இந்த
நிகழ்ச்சியில், நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும்
சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா
பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச்
செயலாளர் பணீந்திரரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த், காம்ப்ளே,
பேரூராட்சிகளின் இயக்குநர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியத்தின் நிர்வாக இயக்குநர் விஜயராஜ் குமார், மற்றும் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.