சிவகாசி நகராட்சியில் ரூ. 1.50 கோடியில் பணிகள்
சிவகாசி நகராட்சி பகுதியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மன்றக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
சிவகாசி நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் வெ.க. கதிரவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் கே.ஏ.ஏ. அசன்பத்ருதீன் முன்னிலை வகித்தார். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கோரிக்கைகளின் படி, தெருக்களில் பேவர் பிளாக் கற்களை பொருத்துவது, போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி, மழைநீர் வாய்க்கால், பழுதாகியுள்ள தண்ணீர்த் தொட்டிகளை சீரமைப்பது, உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 1.50 கோடி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்மன் கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 25 லட்சம்,காமராஜர் நீர்தேக்கத் தொட்டியில் மின்மோட்டர்களை பொருத்துவதற்கு ரூ. 3.30 லட்சம், வெம்பக்கோட்டை அணையில் நீரேற்றம் செய்ய, மின்மோட்டார்களை பொருத்துவதற்கு ரூ. 9.85 லட்சம் ஒதுக்கீடு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது 1.91 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கத் திட்ட மதிப்பீடு தயார் செய்ய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் தீர்மானமும், ஊருணிகளைச் சீரமைத்தும், நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரி மழைநீர் சேமிக்க உள்கட்டமைப்பு செய்ய ஆகும் செலவினை அரசு மானியமாக வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பொறியாளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.