உயிரியல் முறைப்படி கொசுக்களை அழிக்க 150 நீர்நிலைகளில் கம்பூசியா மீன்கள்
பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 150 நீர் நிலைகளில் உயிரியல் முறைப்படி கொசுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்கள் விடப்பட்டுள்ளன என வட்டார மருத்துவ அலுவலர் தெ. ரத்தினவேல் கூறினார்.
செய்யாறை அடுத்த பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் கொசுக்களை அழிக்க டெமிபாஸ் எனும் மருந்தும், முதிர்கொசுக்களை அழிக்க பைத்திரம் எஸ்டாக்ட் எனும் மருந்தும் கொண்டு புகை மருந்து அடித்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெருங்கட்டூர், அசனமாபேட்டை, தென்கழனி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 16 பொது கிணறுகள், 117 வீட்டு கிணறுகள், 7 குளங்கள், 3 ஏரிகள், 2 குட்டைகள் என 150 நீர்நிலைகளில் உயிரியல் முறைப்படி கொசுப் புழுக்களை அழிக்கக் கூடிய கம்பூசியா மீன்கள் விடப்பட்டுள்ளன என்றார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் எ.சங்கரலிங்கம் (அசனமாபேட்டை), ஜானகி இளங்கோவன் (பெருங்கட்டூர்), லட்சுமி திருநாவுக்கரசு (தென்கழனி), துணைத் தலைவர்கள் வேதாச்சலம், ரமேஷ், மருத்துவர்கள் ரம்யா சுந்தர், சங்கர், ஆய்வாளர் கே.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.