தினமலர் 22.03.2010
உடுமலையில் ரூ.1.50 கோடியில் நவீன எரிவாயு மயானம் திறப்பு
உடுமலை : உடுமலையில், மக்கள் பேரவையால் கட்டப்பட்ட நவீன எரிவாயு மயானம் திறப்பு விழா நேற்று நடந்தது.உடுமலையிலுள்ள, இந்திய மருத்துவ சங்கம், ரோட்டரி, லயன்ஸ், வக்கீல்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஆடிட்டர்ஸ் சங்கம், பஸ் உரிமையாளர்கள் சங்கம், அபெக்ஸ் மற்றும் காந்திநகர் ரோட்ராக்ட் சங்கங்கள் இணைந்து, உடுமலை மக்கள் பேரவை துவக்கப்பட்டது.
இதன் மூலம், பொதுமக்களிடம் நிதி திரட்டி, 1.50 கோடி செலவில் நவீன எரிவாயு மயானம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ‘முக்தி‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நவீன எரிவாயு மயான அறக்கட்டளை தலைவர் டாக்டர் சிவசண்முகம் திட்டம் குறித்து விளக்கினார்.
மக்கள் பேரவை தலைவர் தொழிலதிபர் கெங்குசாமி தலைமை வகித்து பேசியதாவது: இங்கு, ஏழை, பணக்காரர்கள், ஜாதி வித்தியாசம் கிடையாது. ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் இந்த ‘முக்தி வளாகம்‘ எழுந்துள்ளது. மனிதன், மரணம், மயானம் பிரிக்க முடியாதது. மயானம் பக்கம் போக பலர் பயப்படுகின்றனர். இங்கு, வர தயங்குபவர்கள் என்றாவது ஒருநாள் வந்துதான் தீர வேண்டும். முனிவர்கள், சித்தர்கள் மயானத்தில்தான் தவம் இருந்தனர். பஞ்சபூதங்களின் கலவைதான் நமது உடல், என்றார்.
தமிழக அரசு எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆலோசகர் விஜயகுமார் பேசியதாவது: வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லாத நவீன எரிவாயு மயானங்கள் மிகவும் அவசியம். மின்சாரத்தின் மூலம் அமைக்கப்படும்போது 800 செல்சியஸ் வெப்பம் மட்டுமே கிடைக்கும். எரிவாயு மூலம் 1,800 செல்சியல் வெப்பம் உருவாக்கப்படும். உயர் வெப்பத்தில் உடல் எரிந்தால் சுற்றுப்புற சீர்கேடு ஏற்படாது. மேலும், வெளியேறும் வாயு தண்ணீரில் சுத்திகரிக்கப்பட்டு, 100 அடி உயர கோபுரத்தில் வெளியேற்றப்படுகிறது. இதில் வெண் புகை மட்டுமே வெளியேறும்‘ என்றார்.
இந்திய மருத்துவசங்கம், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் ஒன்பது லட்சம் மதிப்புள்ள அமரர் ஊர்தியை, ரோட்டரி மாவட்ட ஆளுனர் சகாதேவன், லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுனர் நந்தபாலன், இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் குணசேகரன் வழங்கினர். எம்.பி., சுகுமார், எம்.எல்.ஏ., சண்முகவேலு, நகராட்சி தலைவர் வேலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.