தினமணி 24.08.2009
பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க : அரசு மருத்துவமனைகளில் 1,500 படுக்கைகள்

சென்னை, ஆக. 22: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் 1,500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.
இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற “பாதுகாப்பான சென்னை‘ என்ற தலைப்பிலான மாநாட்டில் அவர் பேசியதாவது:
அமெரிக்கா, கனடா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான பயணிகள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானத்தில் வருகின்றனர்.
இவர்கள் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
8.5 லட்சம் பேருக்கு மருத்துவ ஆய்வு: இந் நோய் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் இந் நோய் பாதிப்புள்ள நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனினும் தமிழகத்தில் அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க 1,500 படுக்கை வசதிகளுடன் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 154 பேருக்கு பாதிப்பு: நாட்டிலேயே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள 2-வது நகரமாக சென்னை உள்ளது. தமிழகத்தில் இந் நோயால் இதுவரை 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்காக்கும் மருந்துகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் திரையரங்குகள், தொலைக்காட்சிகள், நாளிதழ்களில் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகளிலும் இதுகுறித்து பிரசாரம் செய்யப்படுகிறது. தொண்டு நிறுவனங்களும் இப்பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இந்நோய் பாதித்தோருக்கு வலுக்கட்டாயமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளித்தும், ஒரு நோயாளி தப்பியோடியுள்ளார். இந்நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
9 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி: நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக, தமிழகத்தில் இந் நோய் பாதிப்பு குறித்து கண்டறிய 9 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர மாவட்டங்களில் தகுந்த வசதிகளுடன் உள்ள ஆய்வகங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும்.
ஆரம்பத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கி சிலர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது.
நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் காச நோய் தாக்கி உயிரிழக்கின்றனர். காச நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளானோருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கினால் உயிரிழக்க நேரிடுகிறது.
உலக சுகாதார அமைப்பு அதிருப்தி? அமெரிக்காவில் இதுவரை 476 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இந்நோய் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதி சலீம் தெரிவித்துள்ள கருத்து சரியல்ல.
தமிழகத்தில் தான் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலவச முகமூடி விநியோகம்… இந் நோயைத் தடுக்க பொதுமக்கள் அனைவருக்கும் முகமூடிகள் அணிய வேண்டிய தேவை இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தேவைப்பட்டால் மட்டுமே முகமூடிகள் வழங்கப்படும். நோயாளிகள், மருத்துவர்கள், இணை மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டுமே இப்போது முகமூடிகள் வழங்கப்படுகின்றன என்றார் சுப்புராஜ்.