தினமலர் 22.04.2010
விரைவில் சென்னை, மதுரை, கோவையில் ரூ.1,504 கோடியில் ஒருங்கிணைந்த நகரங்கள்
சென்னை:’சென்னை, மதுரை, கோவையில் 2013ம் ஆண்டுக்குள் 1,504 கோடி ரூபாய் மதிப்பில் 35 ஆயிரத்து 270 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ஒருங்கிணைந்த நகரங்கள் உருவாக்கப்படும்‘ என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டசபையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மானிய கோரிக்கையில் அரசு வெளியிட்டுள்ள திட்டங்கள்:தமிழகத்தில் உள்ள பெருநகரங்களை, 2013ம் ஆண்டிற்குள் குடிசைகள் அற்ற நகராக மாறும் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் நடப்பு ஆண்டில் 1,504 கோடி ரூபாய் செலவில், 35 ஆயிரத்து 270 அடுக்குமாடி குடியிருப்புகள் ‘ஒருங்கிணைந்த நகரங்களாக‘ அமைக்கப்படும்.கடந்த 2006 முதல் 2011க்குள் 3,000 கோடி ரூபாய் செலவில், 80 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டு, இதுவரை 46 ஆயிரத்து 650 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மீதமுள்ள 33 ஆயிரத்து 350 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான திட்டமிடல், வடிவமைத்தல் பணி நடந்து வருகிறது. நடப்பாண்டில் 10 ஆயிரம் வீடுகளும், அடுத்த ஆண்டில் 20 ஆயிரம் வீடுகளும் கட்டப்படும்.சுனாமி வீடுகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு 520 கோடி ரூபாயில், 11,520 குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
திருவொற்றியூரில் 3,616 வீடுகள் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. மெரீனாவில் 2,280 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,576 குடியிருப்புகள் மெரீனா மறு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டும் பணி நடப்பாண்டில் துவங்கும். மேலும், எட்டு கடலோர மாவட்டங்களிலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத் தப்படும்.
சென்னைத் துறை முகம், மதுரவாயல் மேம் பால சாலைத் திட்டப்பணியால் பாதிக்கப் படும் குடும்பங்களுக்கு 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளும், பாதிப்புள்ள பகுதியில் வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் குடும்பங்களுக்கு சென்னை புறநகர் பகுதியில் 400 கோடி ரூபாய் செலவில் ஆட்டோ நகர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 35 ஆயிரத்து 962 இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு, வாழ்வியல் ஆதார பயிற்சிகள் அளிக்கப்படும்.
சென்னை பெருநகர வளர்ச்சி பகுதியில் எல்லையினை மறு ஆய்வு செய்து அரசிடம் சமர்ப்பிக்கப்படும். கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில், 17 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டடுக்கு கீழ்தள இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப் படும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.