தினமணி 15.02.2010
மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிதாக 155 ஆசிரியர்கள்: மு.க. ஸ்டாலின்
சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் 2009}ம் ஆண்டு 10}ம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளை அளிக்கும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் (இடமிருந்து) முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், மேயர் மா. சுப்பிரமணியன்.
சென்னை, பிப். 14: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் புதிதாக 155 ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
“பிளஸ்}2′ மற்றும் 10}ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதலிடம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், நூறு சதவீத தேர்ச்சியை பதிவு செய்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை சர்.பிட்டி தியாகராய அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊக்கத் தொகைகளை வழங்கிய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது:
சென்னை மாநகராட்சி, கல்வித் துறையில் பல்வேறு சிறந்தத் திட்டங்களை வகுத்து வருகிறது. துவக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 730 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.19 கோடி செலவில் புதிய வண்ணத்திலான சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 1.04 கோடி செலவில் புத்தகப் பைகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் 765 ஆசிரியர்களுக்கும், 1300 மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சிறந்த திட்டங்கள் காரணமாக, கடந்த 2006}ம் ஆண்டுக்கு முன்பு மாநகராட்சிப் பள்ளிகளில் 10}ம் வகுப்பு, பிளஸ்}2 பொதுத் தேர்வுகளில் இருந்த 63 சதவீத தேர்ச்சி விகிதம், இப்போது 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதிய ஆசிரியர்கள்: மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் 95 பட்டதாரி ஆசிரியர்கள், 56 உடற்கல்வி ஆசிரியர்கள், 4 இசை ஆசிரியர்கள் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றார். விழாவில் மேயர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன், மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) ஆஷிஷ் சட்டர்ஜி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.