தினமலர் 15.05.2010
கோபி நகராட்சியில் 158 தீர்மானங்கள் காத்திருப்பு: இன்று காலை நடக்கிறது பலப்பரிட்சை
கோபிசெட்டிபாளையம்: மூன்று மாதமாக எந்த தீர்மானமும் நிறைவேறாத நிலையில், கோபி நகராட்சி கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 158 தீர்மானங்களின் ‘கதி‘ என்ன என்பது இன்று தெரியவரும்.
கோபி நகராட்சியில் தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஃபிப்ரவரி 25ம் தேதி, மார்ச் 31ம் தேதி மற்றும் மே 4ம் தேதி நடந்த மூன்று கூட்டங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியவில்லை. கடந்த 4ம் தேதி நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சாலை சீரமைப்பு குறித்த தீர்மானத்தை ஒத்திவைக்க கோரி, தி.மு.க., – காங்கிரஸ் கவுன்சிலர்கள் 14 பேர் கமிஷனர் குப்பமுத்துவிடம் 5ம் தேதி மனு கொடுத்தனர். கடந்த 12ம் தேதி நிருபர்களை சந்தித்த நகராட்சி தலைவர் ரேவதிதேவி, ”வரும் 14ம் தேதி நடக்கவுள்ள அவசர கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்ற தி.மு.க., – காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், அன்றைய தினம் நகராட்சி கூட்டம் நடக்கவில்லை. ஆனால், கடந்த 15ம் தேதி நகராட்சி மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, கோபி நகராட்சி அலுவலகத்தில் தீர்மானங்களை ஒத்திவைக்க கோரும் தி.மு.க., – காங்கிரஸ் கவுன்சிலர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, கோபி நகராட்சியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தாமதமாக நடப்பதாக, தி.மு.க., – காங்கிரஸ் கவுன்சிலர்கள் குறை கூறியுள்ளனர். திடீரென இன்று காலை 10.30 மணிக்கு 47 தீர்மானங்களுடன் கோபி நகராட்சி சிறப்பு கூட்டம், 11.30 மணிக்கு 27 தீர்மானங்களுடன் உள்ளூர் திட்ட குழும சிறப்பு கூட்டம், 12 மணிக்கு 41 தீர்மானங்களுடன் அவசர கூட்டம், மதியம் 12.30 மணிக்கு 43 தீர்மானங்களுடன் உள்ளூர் திட்டகுழும அவசர கூட்டம் நடப்பதாக, கவுன்சிலர்களுக்கு தீர்மான நகல்கள் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 158 தீர்மானங்கள் இன்றைய கூட்டங்களில் கவுன்சிலர் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. கவுன்சிலர்கள் மோதல்களை மறந்து தீர்மானங்களுக்கு உயிர் கொடுப்பார்களா அல்லது வழக்கம் போல் ஏற்படும் மோதலால் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் ஒத்தி வைக்கப்படுமா என்பது சஸ்பென்ஸாக உள்ளது.