தமிழ் முரசு 05.09.2013
சென்னையில் 158 இடங்களில் வாடகை சைக்கிள் திட்டம்
சென்னை: நடந்து செல்பவர்களுக்கு வசதியாக ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தை மாநகராட்சி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. சென்னையில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதைதடுக்க மாற்று ஏற்பாடாக சைக்க¤ள் ஓட்டும் பழக்கத்தை மக்களிடையே அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக தனி பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, சைக்கிள் ஷேரிங் திட்டத்தை மாநகராட்சி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி மாநகராட்சி சார்பில் மெட்ரோ ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய ரயில், பஸ் நிலைய பகுதிகளில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்கப்படும். இங்கிருந்து சைக்கிளை பெற்றுக் கொண்டு இதே போன்று மற்றொரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டில் நிறுத்திக் கொள்ளலாம். இதற்கு ஸ்மார்ட் கார்டு போன்ற சிஸ்டம் பயன்படுத்தப்படும். இதன்மூலம் மக்கள் இனி நடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. அதோடு பார்க்கிங் பிரச்னை, வாகனங்கள் திருட்டு போய் விடுமோ என்று அச்சப்படவும் தேவையில்லை. இதன் மூலம் மக்களுக்கு உடல் ஆரோக்கியமும் ஏற்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ‘சென்னையில் முதல்கட்டமாக சைக்கிள் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்த 158 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கு தேவைப்படும் சைக்கிள்களை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்யவும், கட்டணம் குறித்து முடிவு செய்யவும் ஆலோசித்து வருகிறோம். இத்திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் இறுதி வடிவம் பெறும். மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். நல்ல வரவேற்பு கிடைக்கும்‘ என்றார்.