தினமலர் 20.05.2010
மூன்று மாதமாக இழுத்தடித்த 159 தீர்மானங்கள்: ‘பாஸ்‘ மவுனமான கோபி நகராட்சி கவுன்சிலர்கள்
கோபிசெட்டிபாளையம்: கோபியில் மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில் 159 தீர்மானங்களும் அதிக எதிர்ப்பின்றி சில நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டன. ஃபிப்ரவரி 25ம் தேதி, மார்ச் 31ம் தேதி மற்றும் மே 4ம் தேதி நடந்த கோபி நகராட்சி கூட்டங்களில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலால் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 14ம் தேதி கூட்டம் நடப்பதாக தலைவர் ரேவதி தேவியால் தெரிவிக்கப்பட்டும் கூட்டம் நடக்கவில்லை. நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு கூட்டமும், 11.30 மணிக்கு உள்ளூர் திட்ட குழும சிறப்பு கூட்டம், 12 மணிக்கு அவசர கூட்டம், 12.30 மணிக்கு உள்ளூர் திட்ட குழும அவசர கூட்டம் நடப்பதாக கவுன்சிலர்களுக்கு தீர்மான நகல் அனுப்பப்பட்டது. அதில் 159 தீர்மானங்கள் இடம் பெற்றிருந்தன. நேற்று காலை 10.30 மணிக்கு தலைவர் ரேவதிதேவி தலைமையில் கூட்டம் துவங்கியது. தி.மு.க., கவுன்சிலர்கள் திலீப், காஞ்சனாதேவி, பிரகாசம், ரவி, மகேஸ்வரி, ராஜாமணி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் கனகராஜ், முரளிஸ்ரீதர், கோபி நாத், மாரிமுத்து ஆகியோர் வரவில்லை.
நகராட்சி ஊழியர் தீர்மானங்களை படிக்க துவங்கியதும், காங்கிரஸ் கவுன்சிலர் காஜன், ”கூட்டம் நடப்பதாக நேற்று மாலைதான் தீர்மான நகல் வந்தது. இதனால், தீர்மானங்களை ஒத்தி வைக்க வேண்டும்,” என்றார். அப்போது நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கும், காங்கிரஸ் கவுன்சிலர் காஜனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ளாத கவுன்சிலர்களின் எதிர்ப்பை பதிவு செய்யக்கூடாது என அ.தி.மு.க., – ம.தி.மு.க., கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஐந்து நிமிடமே நடந்த சிறப்பு கூட்டத்தில் இடம்பெற்றிருந்த 48 தீர்மானங்களும் ‘பாஸ்‘ என அறிவித்து விட்டு தலைவர் நகராட்சி தலைவர் ரேவதிதேவி வெளியேறினார்.
அடுத்து நடந்த அவசர கூட்டத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் அமர்ந்திருந்தனர். நகராட்சி ஊழியர் தீர்மானங்களை படிக்கத் துவங்கினார். தி.மு.க., – காங்கிரஸ் கவுன்சிலர்கள் அமைதியாக இருந்தனர். 18வது தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்களை பாஸ் செய்யலாம் என அ.தி.மு.க., – ம.தி.மு.க., கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ”அந்த ஒரு தீர்மானம் தவிர மற்ற அனைத்தும் நிறைவேறின. தீர்மானங்களை நிறைவேற்ற உதவிய கவுன்சிலர்களுக்கு நன்றி,” எனக் கூறி விட்டு தலைவர் ரேவதிதேவி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். ஒரு வழியாக கடந்த மூன்று மாதங்களாக கோபி நகராட்சியில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இருந்து வந்த இழுபறி நேற்று முடிவுக்கு வந்தது. வரும் காலங்களிலும் கோபி நகராட்சியில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை ஏற்படாமல் இருந்தால் சரி.