தினகரன் 05.02.2010
16 பேரூராட்சிகளுக்கு பில்லூர் குடிநீர் ரூ.81.46 கோடியில் புதிய திட்டம்
கோவை: கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள 16 பேரூராட்சிகளுக்கு 81.46 கே £டி ரூபாய் செலவில் புதிய பில்லூர் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கோவை மாநகராட்சியில் பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணி நடக்கிறது. 113.74 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகர் பகுதியில் 6.5 கோடி லிட்டர் குடிநீர் தினமும் கிடைக்கும். புறநகர் பகுதிகளுக்கு, அதாவது கோவை மாநகரை ஒட்டியுள்ள பேரூராட்சிகளுக்கு புதிதாக குடிநீர் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
பில்லூர் 2வது குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது, புறநகருக்கு கூடுதலாக 6.5 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கேற்ப பிரதான குழாய், பகிர்மான குழாய், மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதன் மூலம் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, மக்கள் தொகை, குடிநீர் தேவை அடிப்படையில் 16 பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டது. நெ.4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், துடியலூர், வெள்ளகிணறு, இடிகரை, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, வெள்ளலூர், மதுக்கரை, எட்டிமடை, இருகூர், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சூலூர் பகுதிகளுக்கு 81 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் பில்லூர் குடிநீர் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த பணி நடத்தப்படும். புதிய திட்ட மதிப்பீடுகளுடன் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (அரசாணை எண்;118) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேரூராட்சிகள் தங்கள் பங்களிப்பாக 40 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டியிருக்கும். தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடம் கடன் பெற பேரூராட்சிகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடிநீர் திட்டம் நிறைவேறும் போது தனி நபர் குடிநீர் அளவு தினமும் 135 லிட்டர் அளவை எட்டும். அனைத்து பகுதியிலும் தடையின்றி குடிநீர் சப்ளை செய்யப்படும். தற்போதுள்ள மக்கள் தொகை அளவை காட்டிலும் கூடுதலாக 2 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க முடியும். புதிய திட்டத்தின் மூலம் 10 ஆண்டிற்கு மேலாக குடிநீர் தட்டுபாடு ஏற்படாது. பேரூராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கவேண்டியிருக்கும். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு இருப்பதால் சம்பந்தப்பட்ட பேரூராட்சிகள் தங்களுக்கான தொகை செலுத்தி பணிகளை துவக்க முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.