மாநகராட்சி அதிரடி நடவடிக்கை சுகாதாரமற்ற முறையில் தயாரான 160 கிலோ உணவு பொருள் பறிமுதல்
சென்னை: சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 160 கிலோ உணவு பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
பிராட்வே பஸ் நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பிளாட்பார கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து உணவு பொருட்களை விற்பதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து, ராயபுரம் மண்டல சுகாதார அலுவலர் தலைமையில், சுகாதாரத்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் உள்பட 6 பேர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பிராட்வே பஸ்நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில், பல்லவன் இல்லம், பிரைசர் பாலச்சாலை உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் தயாரித்து விற்கப்பட்ட குளிர்பானங்கள், இட்லி, லெமன் சாதம் உள்ளிட்ட 160 கிலோ அடங்கிய பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்கள் அந்த இடத்திலேயே தரையில் ஊற்றி அழித்தனர். இட்லி, லெமன் சாதம் உள்ளிட்ட உணவு பொருட்கள் வேன்களில் ஏற்றி மாநகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.
சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.