தினகரன் 29.11.2010
சட்டவிரோதமாக நிறுவப்பட்ட 1,600 செல்போன் கோபுரங்களை ஒழுங்குபடுத்த மாநகராட்சி முடிவுமும்பை, நவ.29: மும்பையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட 1,600 மொபைல் போன் கோபுரங்களை ஒழுங்கு படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி மும்பையில் 3,489 மொபைல் போன் கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் கோபுரங்கள் கட்டிடங்களின் மேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளன. பாந்த்ரா, கார், சாந்தாகுரூஸ், விலே பார்லே, அந்தேரி மற்றும் ஜோகேஸ்வரியில் மட்டும் 568 சட்டவிரோத கோபுரங்கள் உள்ளன.
பாந்த்ரா, கார், சாந்தாகுரூசின் கிழக்கு பகுதிகள் அடங்கிய எச்&கிழக்கு வார்டில் 96 கோபுரங்களும், பாந்த்ரா, கார், சாந்தாகுரூசின் மேற்கு பகுதிகள் அடங்கிய எச்&மேற்கு வார்டில் 211 கோபுரங்களும் உள்ளன. இதேபோல விலே பார்லே, அந்தேரி மற்றும் ஜோகேஸ்வரியின் கிழக்கு பகுதிகள் அடங்கிய கே&கிழக்கு வார்டில் 206 கோபுரங்கள் உள்ளன. இவை அனைத்தும் மாநகராட்சி அனுமதியின்றி நிறுவப்படவை ஆகும்.
இந்த கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சால் கட்டிடங்களில் குடியிருப்போருக்கு சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படும் என்றும் புற்றுநோய் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எனவே சட்டவிரோதமான இந்த கோபுரங்களை இடித்து தள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று மாநில அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. எனவே இவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்தில் மாநகராட்சி இருந்து வந்தது.
இந்த நிலையில் சிவசேனா கவுன்சிலர் மன்மோகன் சோங்கர் கடந்த வாரம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் சட்டவிரோதமான மொபைல் போன் கோபுரங்களை ஒழுங்கு படுத்த வேண்டும் என கோரியிருந்தார். அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட மொபைல் கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அவர் கொண்டு வந்த தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள 1,600 சட்டவிரோத கோபுரங்களை ஒழுங்கு படுத்தவும் சம்பந்தப்பட்ட மொபைல் கம்பெனியிடமிருந்து ரூ1லட்சம் அபராதம் விதிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள மொபைல் போன் கோபுரங்களில் 50 சதவீதம் கோபுரங்கள் சட்டவிரோதமானவை என தெரிய வந்துள்ளது.