தினமலர் 26.02.2010
ஆரணி மார்க்கெட் ரோட்டில் வருது ரூ. 1.65 கோடியில் சிமென்ட் சாலை
ஆரணி: ஆரணி மார்க்கெட் ரோட்டில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்க கால்வாய்கள் கட்டி சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. ஆரணி நகரின் பிரதான சாலையான மார்க்கெட் ரோட்டில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இது குறித்து வியாபாரிகள், அதிகாரிகள் இடையேயான ஆலோசனை கூட்டம் ஆரணி நகர்மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ. சிவானந்தம் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். கமிஷனர் சசிகலா வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை, தொலைபேசி, டிராபிக் போலீஸ் மற்றும் சேவை சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ. சிவானந்தம் பேசியதாவது: ஆரணி நகரின் முக்கிய வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ள மார்க்கெட் ரோட்டில் அதாவது, பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து மண்டிவீதி, காந்திசிலை வரை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோட்டின் இருபுறமும் பக்க கால்வாய்கள் அமைத்து சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், மண்டி வீதி, காந்தி சிலையில் இருந்து எஸ்.எம்.ரோடு பிள்ளையார் கோயில் வரை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி 2 மாதங்களில் முடிவடையும். எனவே, வியாபாரிகள் தானாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பணிகள் நடக்க ஒத்துழைப்பு தரவேண்டும். இல்லையெனில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும், மண்டி வீதி காந்தி சிலை அருகில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள், கல்வெர்ட்டுகள் அகற்றப்படும். சைக்கிள், டூவீலர் “பார்க்கிங்‘ செய்ய தனியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.