தினமலர் 05.04.2017
அடையாறு ஆறு மறு சீரமைப்புக்கு திட்ட மதிப்பீடு… ரூ.1,666 கோடி! 5,500 குடும்பங்களை மறு குடியமர்வு செய்ய முடிவு

சென்னையின் பிரதான
நீர்வழித்தடமான அடையாறு ஆற்றை, 42 கி.மீ., நீளத்திற்கு மறு சீரமைப்பு
செய்ய, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1,666 கோடி
ரூபாய் செலவில், ஆற்றை நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கவும், முன்மாதிரியாக
மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்
மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார் கிராமத்தில் துவங்கி,
பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது அடையாறு ஆறு. 227 ஊராட்சிகள்,
ஒன்பது பேரூராட்சிகள், நான்கு நகராட்சிகள், சென்னை மாநகராட்சியின் ஒரு
பகுதி ஆகிய பரப்பளவில், பெய்யும் மழைநீர், இந்த ஆற்றில்
வடிகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி,
மறுகால் திறக்கப்பட்டால், இந்த ஆறு வழியாக தான், உபரிநீர் கடலுக்கு
செல்லும். 2015ல், இந்த ஆற்றால் ஏற்பட்ட வெள்ள பெருக்கை, சென்னை நகரத்தை
மூழ்கடித்ததை, மக்கள் மறக்கவில்லை.
தமிழக அரசு, கூவம்
நதியை முன்மாதிரியாக மாற்ற, மறு சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதை
போல, கடுமையான ஆக்கிரமிப்பு, கழிவுநீர், குப்பையின் பிடியில் சிக்கியுள்ள
அடையாறு ஆற்றையும் மறு சீரமைப்பு செய்ய முடிவெடுத்தது.சென்னை நதிகள்
பாதுகாப்பு அறக்கட்டளை மூலம், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க
உத்தரவிடப்பட்டது.
இந்த அறக்கட்டளை மூலம் நியமிக்கப்பட்ட
தனியார் நிறுவனம், 42 கி.மீ., நீளத்திலும், ஆற்றின் நிலை, பிரச்னை,
சரிசெய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்மாதிரியாக மாற்ற செய்ய
வேண்டிய திட்டங்கள் குறித்தும், அதற்கான மதிப்பீடுகள் குறித்தும் விரிவான
அறிக்கை அளித்துஉள்ளது.
இதன்படி, அடையாறு ஆறு மறு சீரமைப்பு திட்டத்திற்கான, விரிவான திட்ட அறிக்கை, தமிழக
அரசின்
ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசின் நிர்வாக அனுமதி
கிடைத்ததும், அடையாறு ஆறு சீரமைப்பு திட்டம், மூன்று பிரிவுகளாக எடுத்துக்
கொள்ளப்பட உள்ளன.
முதல் பிரிவில், மணப்பாக்கம் முதல் பட்டினப்பாக்கம்
வரை, ஆற்றின் கரையோரம் மிதிவண்டி பாதை, நடைபாதை, ஐந்து இடங்களில், நவீன
தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்,
சுற்றுச்சூழல் பூங்கா, ஆற்றின் இருபக்கமும் தடுப்பு வேலி, நிரூற்றுகள்
ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
மேலும், குப்பை அகற்றுதல்,
சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்களை துண்டித்தல், ஆற்றின் இருபக்கமும் நில
அளவை செய்து, எல்லையை அடையாளப்படுத்துதல் உள்ளிட்ட, 64 திட்டங்கள்
செய்யப்படுத்தப்பட உள்ளன.அரசு நிர்வாக அனுமதி கொடுத்த பின், முதற்கட்டமாக
எடுக்க உள்ள, 64 திட்ட பணிகளையும், மூன்று ஆண்டுகளில் முடிக்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் நீர்வழித்தடத்தில்
முக்கியமாக கருதப்படும் அடையாறு ஆற்றையாவது, கூவம் சீரமைப்பு திட்டத்தை
போல, ஆண்டுக்கணக்கில் இழுக்காமல், அதிகாரிகள் விரைந்து முடித்தால்
புண்ணியம்.
4,000 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
அடையாறு
ஆற்றில், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின், 4,000 ஆக்கிரமிப்பு வீடுகள்
அகற்றப்பட்டு, மறு குடியமர்வு செய்யப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட
இடங்களில் சீரமைப்பு பணிகள் முதலில் துவங்கப்படும். சென்னை மாநகராட்சி
இந்த திட்டத்தில் நடைபாதை, மிதிவண்டி பாதை, பூங்கா அமைக்கும். குப்பை,
கழிவுகளை அகற்றும் பணிகளையும் மாநகராட்சி செய்யும். கழிவுநீர்
சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் ஆகிய
பணிகளை குடிநீர் வாரியம் செய்யும். தற்போது ஆற்றின் கரையில் உள்ள கருவேல
மரங்கள் உட்பட, தேவையில்லாத மரங்களை அகற்றிவிட்டு, ஆற்றங்கரையில் வளர
வேண்டிய மரங்கள் நடவு செய்யப்படும்.சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.