தினமணி 15.08.2009
சங்கரன்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் ரூ.1.68 கோடி நலப் பணிகளுக்கு விவாதமின்றி தீர்மானங்கள் நிறைவேற்றம்
சங்கரன்கோவில், ஆக. 14: சங்கரன்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் எந்தவித விவாதமுமின்றி சுமார் ரூ.1.68 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சிலர் கலந்துகொள்ளவில்லை.
சங்கரன்கோவில் நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, நகர்மன்ற உறுப்பினர்களுக்கு நிகழ்ச்சி நிரல் வழங்கப்பட்டது.
அதில் சிறிய, நடுத்தர நகரங்களின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் மற்றும் மானியத் தொகையில் சுமார் ரூ. 1.68 கோடி மதிப்பீட்டில் நகரின் பல்வேறு பகுதிகளில் தார்சாலை, சிமின்ட்தளம், மழைநீர் வடிகால் பணிகளுக்கான 60 ஒப்பந்தப்புள்ளி தீர்மானங்கள் உள்ளிட்ட 76 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
காலை 11.30 மணியளவில் நகர்மன்றத் தலைவி பார்வதிசங்கர், பொறியாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் நகர்மன்றக் கூட்டரங்கிற்கு வந்தனர். ஆனால், உறுப்பினர்கள் யாரும் கூட்டரங்கிற்குள் வரவில்லை. திமுக, அதிமுக உறுப்பினர்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர்.
வெகுநேரமாகியும் உறுப்பினர்கள் வராததால், நகர்மன்றத் தலைவி பார்வதிசங்கர் தனது அறைக்குத் திரும்பினார். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கே.கண்ணன், எஸ்.டி. சங்கரகுமார், செ.குணசேகரன் உள்ளிட்ட அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் சுமார் 12 மணியளவில் கூட்டரங்கிற்கு வந்தனர். திமுக உறுப்பினர்கள் யாரும் வரவில்லை.
இந் நிலையில், பிற்பகல் 12.30 மணியளவில் கூட்டரங்கிற்கு நகர்மன்றத் தலைவி பார்வதிசங்கர் மற்றும் அதிகாரிகள் வந்தனர். துணைத் தலைவர் சங்கரன் மற்றும் சில திமுக உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை.
இதைத் தொடர்ந்து, “”ஆல்பாஸ்” என்ற ஒற்றை வார்த்தையில் சுமார் ரூ. 1.68 கோடி மதிப்பீட்டில் செய்யப்படவுள்ள பணிகளுக்கான 76 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.