தினமணி 08.04.2010
துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.169 வழங்க வேண்டும்
புதுச்சேரி, ஏப். 7: புதுச்சேரியில் 24 மணி நேர துப்புரவு பணி செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.169 வழங்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ எ.அன்பழகன் வேண்டுகோள்விடுத்தார்.
÷புதுச்சேரி சட்டப்பேரவையில் 2010-11-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை எ.அன்பழகன் பேசியது: புதுச்சேரி முழுவதும் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனிக் குழுக்கள் மூலம் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு இல்லை. நாள் ஒன்றுக்கு ரூ.90 மட்டுமே வழங்கப்படுகிறது. ÷
இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.169 வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை கூட செயல்படுத்தவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டம் 1970-ன் படி அவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக பதிவு செய்ய வேண்டும். அதையும் இந்த அரசு செய்யவில்லை. அவர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். தற்போது 6 மாதத்துக்கு 1 முறை கூட சம்பளம் வழங்குவதில்லை. ÷தனியார் பள்ளி, கல்லூரிகள் மீது சொத்து வரி வசூல் செய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபில் டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு உரிய வரியையும் வசூலிக்க வேண்டும். கேபில் டிவி இணைப்புகளுக்கும் உரிய வரியை விதிக்க வேண்டும். 40 அடி அகலமுள்ள பிரதான சாலைகளில், நடைபாதையில் பதிக்கக்கூடிய சிமெண்ட் அச்சு கற்களை பதிக்கின்றனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த தொல்லைக்கு ஆளாகின்றனர்.
÷வெள்ளை அறிக்கை: புதுச்சேரி வீட்டு வசதி வாரியம் சிபிஐ விசாரணையில் சிக்கி தவித்து வருகிறது. விற்பனை செய்யப்படாமல் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல இடங்கள் எவ்வித விளம்பரமும் இன்றி, பழைய விலைக்கே வேண்டியவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் நடைபெற்ற ஊழல் குறித்து எழுத்த புகாரின் பேரில் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பேசினார்.